கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்?

கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்?
Published on

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வலுவான போட்டியை வழங்கியவை இரு தொகுதிகள் தான். ஒன்று தருமபுரி. அங்கே பாஜக கூட்டணியில் இருந்த பாமக. இன்னொன்று விருதுநகர்  தொகுதியில் தேமுதிக. இந்தக் கட்சி மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சி.

மற்றபடி எந்தத் தொகுதியிலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக கணிசமான வாக்குகளை பெற்று திமுக அணியினரை வெற்றிக்குப் போராட வைக்கமுடியவில்லை என்பது அக்கட்சிக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

 தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய ஏழு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.   மேலும் ஒன்பது தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கும் மூன்று தொகுதிகளில் நான்காம் இடத்துக்கும் அதிமுக சென்றது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வென்றிருந்த தேனி தொகுதியும் இம்முறை கைவிட்டுப் போய்விட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தது. ஆக எடப்பாடியின் தலைமையில் மூன்று பெரிய தேர்தல்களை( உள்ளாட்சி, இடைத் தேர்தல்களைச் சேர்த்து வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சாமல்) இழந்திருக்கிறது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் படுதோல்வி. ச.ம. தேர்தலில் வெறும் தோல்வி.( 65 இடங்கள் அல்லவா?)

போட்டியிட்ட 34 தொகுதிகளில் அதிமுக பெற்ற வாக்குகள் சதவீதம் 20.47%. தேமுதிக போட்டியிட்ட தொகுதிகளையும் சேர்த்தால் 23%.

”இதை வேறு மாதிரியும் பார்க்கலாம். அதிமுகவுடன் கூட்டணி சேர தேமுதிகவைத் தவிர வேறெந்த கட்சியும் முன் வர வில்லை. பாமக போன்ற கட்சிகள் பாஜக பக்கம் போய்விட்டன. இருப்பினும் 24 தொகுதிகளில் அதிமுக இரண்டாம் இடம் பெற்றது. அதன் கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக 3 இடங்களில் இரண்டாம் இடம் பெற்றது. இதை நினைத்து அதிமுகவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்” என்றார் ஒரு அரசியல் நோக்கர். 2019 இல் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டால் இது பரவாயில்லை. ஏனெனில் அப்போது அதிமுகவுடன் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூடுதலாக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. இப்போதிருப்பதுபோல் ஓபிஎஸ் குழுவினர் பாஜக பக்கம் போயிருக்கவில்லை.

பாஜக பக்கம் டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் குழுவினர் சென்றிருந்ததால் வழக்கமாக அதிமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகளில் உடைசல் ஏற்பட்டது உண்மைதான் என்பதை அரசியல் நோக்கர்கள் ஒப்புக்கொள்வர். எனவேதான் அதிமுகவின் பிரிவுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன.

 ’பிரிவுகளும் இணைவுகளும் அதிமுகவில் மிக இயல்பு. 1972-இல் எம்ஜிஆர். கட்சி ஆரம்பித்து ஆறு மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது அதிமுக. 1976-இல் எம்ஜிஆர் அதிமுகவின் பெயரை அனைந்திந்திய அண்ணா திமுக என மாற்றியபோது அதை எதிர்த்து கோவை செழியன், இந்திரகுமாரி, ஜி விஸ்வநாதன் போன்றவர்கள் வெளியே சென்றார்கள். வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால் அவர்களையும் எம்ஜிஆர் அரவணைத்தார். 1984-இல் எஸ்டிசோமசுந்தரம் நமது கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் தோற்றபோது, அவரை அழைத்து கட்சியில் இணைத்துக்கொண்டார். அவரது மறைவுக்குப் பின்னால் ஜெ- ஜா அணிகள் பிளவுண்டன. 1989 தேர்தலுக்குப் பின்னர் ஜானகி, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து விலகினார். இரட்டை இலை கிடைத்தது. அன்றைக்கு நடந்த மதுரை மேற்கு, மருங்காபுரி இடைத் தேர்தல்களில் திமுகவை எதிர்த்து ஒருங்கிணைந்த அதிமுக வெற்றிக்கொடி நாட்டியது. ஜெயலலிதா மரணிக்கும்போது இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக விட்டுச்சென்றார். அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் சமீபத்திய தோல்விகளால் துவண்டுபோயிருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் கூட போட்டியிட தயங்கும் நிலை இருக்கிறது’ என்று அதிமுகவின் நிலையை விளக்குகிறார் பத்திரிகையாளர் துரை.கருணா.

ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்திருந்தால் மேலும்மேலும் அதிமுக நலிவுறும் நிலையே தொடரும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா வை எடப்பாடியார் அதிமுகவுக்குள் வைத்துக்கொள்ள முடியுமா? இதனால் உண்மையில் பலம் அதிகரிக்குமா?

‘இரட்டை இலை சின்னம் இல்லை. பலாப்பழம் என்ற ஒன்றைத் தந்தார்கள். அதை எடுத்துக்கொண்டு ராமநாதபுரம் சென்றார் ஓபிஎஸ். அங்கே அவரை எதிர்த்து ஐந்து ஓபிஎஸ்களைத்தேடிப்பிடித்து நிறுத்தினீர்கள். ஆனாலும் 3.42 லட்சம் வாக்குகளைப் பெற்று, தோற்றாலும் தன் பலத்தை நிரூபித்தாரே ஓபிஎஸ்? எந்த சசிகலாவை எதிர்த்து தரும யுத்தம் தொடங்கினாரோ அவருடன் இணைய ஓபிஎஸ் முன்வந்துவிட்டார். கட்சியின் நலனுக்காக எடப்பாடிதான் முடிவெடுக்கவேண்டும் என்று ஒரு சாரார் கூற ஆரம்பித்துள்ளனர்.

இந்த மூவரையும் எப்படி ஒன்றாக்குவது?

’சசிகலாவுக்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அவரை கட்சித் தலைவர் ஆக்கிவிட்டு, எடப்பாடி பொதுச்செயலாளர் ஆகட்டும். ஓபிஎஸ் இணை பொதுச்செயலாளர் ஆகட்டும். மூவரும் கூடிப்பேசி தங்கள் ஆதரவாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைப் பகிர்ந்துகொள்ளட்டும். கட்சியை வழி நடத்த மூத்த தலைவர்கள் 9 பேர் கொண்ட குழு அமைத்து, இவர்கள் மூவருடன் சேர்த்தால் 12 பேர் ஆகிறது. இந்த உயர் மட்டக்குழு சேர்ந்து முடிவெடுக்கட்டும். இன்றைக்கு அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மக்கள் ஆதரவு கொண்ட தலைவர்கள் இல்லாத நிலையில் இது ஒன்றுதான் வழி. இதைச் செய்தால் ஒழிய வரும் தேர்தலில் தோல்வியைத் தவிர்க்க முடியாது’ என்று அந்திமழையிடம் கூறுகிறார் துரை கருணா.

 ‘அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் சோர்வைப் போக்கும் பொறுப்பு எடப்பாடி கையில்தான் உள்ளது. 100 விழுக்காடு கட்சியின் லகான் அவர் கையில் உள்ள நிலையில் அவர் தன்னுடன் பிற கட்சிகள் கூட்டணிக்கு வரத் தயங்குவது ஏன்? என்கிற சுயபரிசீலனை செய்யவேண்டும். அதிமுக பலமாக இருக்கிறது என்று அவர் சொல்லலாம். ஆனால் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள், மாற்றுக்கட்சியினர் தம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உணரவேண்டும். இவரை முதல்வர் வேட்பாளராக ஏற்க 2021லேயே ஓபிஎஸும் டிடிவியும் தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் இவர்தான் புறம் தள்ளினார். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போக வில்லை. மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பதாகத் தெரிகிறது. அதை அர்த்தமுள்ளதாக நடத்தி, நிஜமான ஒற்றுமையை உருவாக்கினால் ஒழிய அடுத்த தேர்தலில் வெற்றியை மனதில்கூட நினைக்கமுடியாது” என்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.

என்னதான் கட்சியைக் கையில் வைத்திருந்தாலும் முக்கியமான ஆட்களை இந்த எம்பி தேர்தலில் அவரால் போட்டியிட வைக்கமுடியவில்லை. எல்லாரும் சட்டமன்றத்தில் பார்க்கலாம் எனத் தட்டிக் கழித்த நிலைதான் அங்கே தென்பட்டது.

பாஜகவின் திருதாஷ்டிர ஆலிங்கனம் தான் பிரச்னை என அங்கிருந்து வெளியே வந்த எடப்பாடி, பல்வேறு அழுத்தங்களையும் மீறி தனித்துப் போட்டியிட்டு தன் மன உறுதியையும் தொண்டர் செல்வாக்கையும் நிரூபித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு சாதுர்யமான முடிவுகளுக்கு இறங்கிவந்து தொண்டர்களை ஒன்று சேர்த்து தானொரு  தேர்ந்த அரசியவாதி என்பதையும் உணர்த்துவாரா?  பொறுத்திருந்து பார்க்கலாம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com